×

பிளாஸ்டிக் கவரில் சாப்பாடு... பாதுகாப்பில்லாத குடிநீர்... நடைபாதை உணவகங்களில் சுகாதாரம் கேள்விக்குறி : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

திருவள்ளூர், நவ. 2: திருவள்ளூர் மாவட்டத்தில் தெருவுக்கு, தெரு தள்ளுவண்டி டிபன் கடை அதிகரித்து வருகின்றன. ஓட்டல்களில் விலை அதிகமாக இருப்பதால் இதுபோன்ற குறைந்த விலை கடைகளை மக்கள் நாடிச் செல்கின்றனர். ஆனால், அங்கு சுகாதாரம் இருக்கிறதா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், மறைமுகமாக உடல் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கிராம பகுதிகளில் இட்லி, தோசையை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தான் வீடுகளில் செய்து உண்பது வழக்கம். ஏனென்றால், இட்லி, தோசைக்கு, அரிசி, உளுந்து மாவு அரைக்க கிராமங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆட்டுக்கல் இருக்கும். பிற வீடுகளில் இருக்காது.
தினசரி உணவாக, இயற்கை தானியங்களை கொண்டு சமைக்கப்படும் கேழ்வரகு, சோளம், கம்பு, குதிரைவாலி போன்றவை இருக்கும். இரண்டு வேளை சிறு தானியங்களும், ஒரு வேளைக்கு அரிசி சாப்பாடும் இருக்கும். இட்லி, தோசை எல்லாம் ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை தான்.

நெல் விளைச்சல் அதிகரித்த பிறகு, கிராமங்களிலும் அதிகப்படியான உணவாக அரிசி சாதம் உள்ளது. காலை உணவு இட்லி, தோசையாக மாறி விட்டது. தற்போது கிராமங்களிலும் இந்த பழக்கம் வந்து விட்டது. நகர் பகுதியில் முன்பு, தெருவுக்கு ஒரு வயதான பாட்டி இட்லி விற்பார். தற்போது, ‘‘மெஸ்’’ என அழைக்கப்படும், வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்பனை செய்யப்படும் ஓட்டல்களில் இட்லி, தோசை, பூரி மற்றும் சப்பாத்தி போன்றவையும் தயாரித்து விற்கப்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை அதிகரித்து வருவதால், குறைந்த விலைக்கு டிபன் சாப்பிட, சாலையோர தள்ளுவண்டி டிபன் கடைகள் அதிகரித்துள்ளன. பெரிய ஓட்டல்களில் ஒரு இட்லி ரூ.10, தோசை ரூ.50, மதிய சாப்பாடு ரூ.75 - 100 வரை விற்கப்படுகிறது. இந்த விலையில், பாதிக்கும் குறைவாக தள்ளுவண்டிகளில் கிடைப்பதால் இந்த கடைகளை கூட்டம் மொய்க்கிறது. கூலி வேலை, நிறுவனங்களில் வேலை செய்வோர், அவசர தேவைக்கு சாப்பிடுபவர்கள், இந்த கடைகளின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதுபோல, அசைவ உணவு வகைகளான, பிரியாணியும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டல்களில், அரை பிளேட் பிரியாணி ரூ.120க்கு விற்கப்படுகிறது. கையேந்தி பவன் கடைகளில் ரூ.70க்கு கிடைக்கிறது.

தள்ளுவண்டிகள் மற்றும் தெருவோர கடைகளில் விலை எந்த அளவுக்கு குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு சுத்தம், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குடிக்க வழங்கப்படும் தண்ணீர், சமையல் பாத்திரங்கள், சமையல்காரர்களின் கை விரல்களில் உள்ள அழுக்கு, அந்த இடத்தின் சுற்றுப்புற சுகாதாரம், தூசு போன்றவை அருவருக்கத்தக்க அளவில் இருக்கும். அதோடு வாழை இலை பயன்பாடு குறைந்து விட்டதால், உடல் நலத்திற்கு தீங்கான, பிளாஸ்டிக் பேப்பர்களில், சுடச்சுட உணவு பண்டங்களை வைத்து சாப்பிட கொடுக்கின்றனர். இட்லியை ருசித்து சாப்பிடுபவர்களுக்கு பிளாஸ்டிக் பேப்பரின் பாதிப்பு தெரிவதில்லை. உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை கண்டறிவதற்காக, மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், வேலை செய்துள்ளோம் என்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு ஒரு முறை, பெயரளவுக்கு ஆய்வு செய்கின்றனர். குறைந்த விலையில் உணவு சாப்பிடுவதிலும், விற்பதிலும் தவறில்லை. மக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், உணவு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பம். அதை விற்பனையாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் அதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எனவே, தள்ளுவண்டிகளில் விற்கப்படும் உணவுகளை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, சுகாதாரமற்ற உணவுகளை விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : pavement restaurants ,food security officials ,
× RELATED வீரபாண்டி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை